அரியலூர் அருகே மூதாட்டி மர்ம மரணம்: 15 பவுன் நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை

அரியலூர்

 

 

விக்கிரமங்கலம், மார்ச். 21

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்ததுடன், அவரிடமிருந்த 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விக்கிரமங்கலம் அடுத்துள்ள பெரிய திருக்கோணம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (72). இவரது கணவர் துரைசாமி 15 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். ராஜலட்சுமி தனது பேரனான வசந்த் (35) என்பவரது வீட்டின் மாடியில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று காலை, வசந்த் மற்றும் அவரது மனைவி அருணா ஆகியோர் தங்களது குழந்தைக்கு உடல்நலமில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக அரியலூர் சென்றிருந்தனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள், ராஜலட்சுமி கட்டிலில் அசைவற்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை எழுப்ப முயன்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

நகைகள் கொள்ளை:

தொடர்ந்து சோதித்ததில், ராஜலட்சுமியின் கையில் இருந்த தங்க வளையல்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. மேலும், வீட்டின் உள்ளே இருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 பவுன் நகைகளும் திருடப்பட்டிருந்தது உறுதியானது.

போலீசார் விசாரணை:

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் ஜெயங்கொண்டம் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்கள்:

அப்பகுதி மக்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பகல் 12 மணியளவில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ராஜலட்சுமியின் வீட்டிற்கு வந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. அந்த நபர்கள் யார்? மூதாட்டியின் மரணத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் மூதாட்டி உயிரிழந்ததுடன் நகை கொள்ளையடிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

செய்தியாளர்: ஜேசுராஜ்

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *