
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, தகுதியற்றவர்களுக்கு சமத்துவபுர வீடுகள் ஒதுக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உப்பிலியபுரம் ஒன்றியம், த.மங்கபட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். எனினும், இந்த சமத்துவபுரத்திற்கு பயனாளிகளைத் தேர்வு செய்வதில் தொடக்கத்திலிருந்தே பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

ஏற்கனவே சொந்த வீடும், விவசாய நிலமும் உள்ள வசதியானவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து மக்கள் ஏற்கனவே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.
தற்போது இப்பிரச்சினை தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, தகுதியான ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, **தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு** தலைமையில் தளுகை கிராமப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து போராட்ட இடத்திற்கு நேரில் சென்ற துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சரோஜா இளங்கோவன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் பேசிய அவர்
நான் வெற்றி பெற்றவுடன், த.மங்கபட்டி சமத்துவபுர வீடுகள் ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, சட்ட ரீதியான தீர்வு காண்பேன். தகுதியுள்ள நபர்களுக்கு வீடுகள் கிடைப்பதை உறுதி செய்வேன்” என வாக்குறுதி அளித்தார்.
வேட்பாளரின் இந்த உறுதியைத் தொடர்ந்து, அங்கு நிலவிய பதற்றம் தணிந்தது. எனினும், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது கோரிக்கை தொடரும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

