துறையூரில் பழமையான கோவில் சிலைகள் சேதம்: பெண் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை கோரி புகார்

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூரில் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள வசந்த மண்டபத்தின் முகப்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அகத்தியர், மார்க்கண்டேயர் வரலாறு, சிவன், பார்வதி, நந்தி, சிவலிங்கங்கள் உள்ளிட்ட சுமார் 15 சுதை சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

கடந்த 2024ஆம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், சில பணிகள் மட்டும் நிறைவுபெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவிலில் வர்ணம் பூச தனியார் அமைப்பினர் அறநிலையத்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிலர், கோவிலை தங்களது கட்டுப்பாட்டில் நடத்தி வந்ததாக கூறப்படும் ஜெயலட்சுமி, ஸ்ரீதர், நக்கீரன் உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில், முன் மண்டபத்தின் மீது அமைந்திருந்த சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், சம்பந்தப்பட்ட மூன்று நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பகல்நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்து அமைப்பினரும் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *