
நாகப்பட்டினம்:
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு, நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
“நமது அங்கன்வாடி – நமது பொறுப்பு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் ஊட்டச்சத்து, குழந்தைகளின் ஆரோக்கியம், சமச்சீர் உணவு, தாய் மற்றும் குழந்தைகளின் நலன் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர், ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
