
புளியஞ்சோலையில் பெண்கள், குழந்தைகள் படும் அவதி – அதிகாரிகள் கவனிப்பார்களா?
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இயற்கை எழில் கொஞ்சும் முக்கிய சுற்றுலா தளமான புளியஞ்சோலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள புளியஞ்சோலை, திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தளத்தில், சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.7.67 லட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் பாதுகாப்பு அறை கட்டப்பட்டுள்ளது.

ஆனால் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், அந்த அறை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதேபோல், சுற்றுலா பயணிகளுக்காக கட்டப்பட்டுள்ள உடைமாற்றும் அறைகள் மற்றும் பொதுக்கழிப்பறைகளும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாகவே இருப்பதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உடைமாற்றவும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் உரிய வசதியின்றி அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதற்காக அரசு நிதியில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் மறுபுறம் அவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்பட்டும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் கட்டணம் வசூலித்து, ஆற்றுப் பகுதிக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர்.
ஆனால், சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு தேவையான கழிப்பறை, உடைமாற்றும் அறை, பொருட்கள் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏன் முழுமையாக பயன்பாட்டில் இல்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தளத்தில், பல ஆண்டுகளாக கட்டிடங்கள் திறக்கப்படாமல் இருப்பது சுற்றுலா துறையின் செயல்பாடுகள் மீதும் கேள்வியை எழுப்பியுள்ளது.
ரூ.7.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொருட்கள் பாதுகாப்பு அறை ஏன் இதுவரை திறக்கப்படவில்லை?
உடைமாற்றும் அறைகள் மற்றும் பொதுக்கழிப்பறைகள் ஏன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை?
பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு ஏற்ற அடிப்படை வசதிகள் எப்போது வழங்கப்படும்?
என்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பச்சபெருமாள்பட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய விளக்கம் அளிப்பதுடன், நீண்டகாலமாக பூட்டிக்கிடக்கும் அனைத்து வசதிகளையும் உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இல்லையெனில், சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் புளியஞ்சோலை… அடிப்படை வசதிகளை மட்டும் மறுக்கும் சுற்றுலா தளமாகவே தொடருமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
