செய்தியாளர் தி.வசந்தகுமார்
200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு – மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்ற வெற்றியாளர்கள்
பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளை சங்கச் செயலாளரும் பயிற்சியாளருமான ஆனந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சங்கப் பொருளாளர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

4 முதல் 6 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் மற்றும் 9, 11, 14, 17 வயதுப் பிரிவுகளில் ஆண், பெண் எனத் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், ஒன் லைன் வீல், டூ லைன் வீல், த்ரீ லைன் வீல் மற்றும் ரிங் மேட்ச் ஆகிய பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன. இதற்கு முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் ரோடு ரேஸ் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது வேகத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சங்கத் தலைவர் வழக்கறிஞர் அன்புதுரை ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

இப்போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள், சென்னையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள், வீரர், வீராங்கனைகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
