
துறையூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தமிழ் வருடமான ஸ்ரீ பராபவ ஆண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு 61 வது ஆண்டு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்தல் மற்றும் ஆண் பக்தர்கள் காவடி எடுத்தல் நிகழ்வு துறையூர் நகர ஆறுநாட்டு வேளாளர் சார்பில் நடைப்பெற்றது. காலை 6 மணிக்கு மூலவர் காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 50 குடங்களில் பால் நிரப்பப்பட்டு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ஆண் பக்தர்கள் காவடி எடுத்தும் கோவிலைச் சுற்றி வந்தனர். பின்னர் பால்குடங்களை சுமந்த பெண் பக்தர்கள் காவடி எடுத்த ஆண் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாலக்கரை, பெரம்பலூர் சாலை, சிலோன் ஆபீஸ் பேருந்து நிறுத்தம், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஆலமரம் பேருந்து நிறுத்தம், திருச்சி சாலை வழியாக துறையூர் பேருந்து நிலையம் வந்தடைந்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு பாலக்கரை வழியாக துறையூர் சிவன்கோவிலைச் சென்றடைந்தனர். துறையூர் நந்திகேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் கொண்டுவந்த பால்குடங்கள் மூலம் பால் அபிஷேகம் நடை பெற்றது. பிறகு மூலவர் உற்சவர் அலங்காரம் செய்யப்பட்டு நண்பகல் பூஜை நடைப்பெற்றது. மாலை முருகப்பெருமான் திருவீதி உலாவாக நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வந்திருந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை அறுசுவை அன்னதானம் திருச்சி சாலையில் உள்ள ஆறு நாட்டு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் துறையூர் நகர ஆறுநாட்டு வேளாளர் நிர்வாகிகளும் உறுப்பினரகளும் செய்திருந்தனர்.

