
செய்தியாளர்:வசந்த்
பெரம்பலூர், ஜூலை 24:
பெரம்பலூர் துறைமங்கலம் திட்டப் பகுதிக்குட்பட்ட கவுல் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த கிணற்றில் தண்ணீர் வற்றியதால், முன்னாள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின் பேரில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கல் குவாரியிலிருந்து குடிநீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற சாலைப் பணிகளின்போது ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் குடியிருப்புக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததாகவும், அவை இதுவரை சீரமைக்கப்படாததால் தற்போதைய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து, குடியிருப்புவாசிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு குடியிருப்புவாசிகள் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

