
விக்கிரமங்கலம், ஏப்ரல் 28:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் ராமர் (27), விவசாயக் கூலி தொழிலாளி ஆவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அரியமுத்துவுக்கு சொந்தமான டிராக்டருடன் இணைக்கப்பட்ட கடலை அடிக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக ராமரின் இடது கை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் அவரது கை கடுமையாக நசுங்கியதுடன், முதுகுத் தண்டுவடமும் பாதிக்கப்பட்டது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரியலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ராமரின் தந்தை முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் – ஜேசுராஜ்

