பஞ்சமி நில மீட்பு போராளிகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம்!
நாகப்பட்டினம், அக். 10:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்ணுரிமை நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகள் சான் தாமசு, ஏழுமலை ஆகியோருக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த சான் தாமசு, ஏழுமலை ஆகியோரின் நினைவு நாளான அக்டோபர் 10-ஆம் தேதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மண்ணுரிமை நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
அதன்படி, கீழ்வேளூர் கடைத்தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் நாக. அருட்செல்வன் தலைமை வகித்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து, உயிர்நீத்த போராளிகளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளஞ்சிறுத்தை பாசறைச் செயலாளர் அறிவழகன், வடக்கு ஒன்றியச் செயலாளர் முருகானந்தம், பேரூர்க் கழகச் செயலாளர் குணா, ஒன்றியச் செயலாளர்கள் பாண்டியன், பாவேந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
